விநாயகர் சதூர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் விளக்கம்

Update: 2023-09-13 14:23 GMT

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதூர்த்தி விழா மற்றம் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது: ஏற்கெனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒவ்வொரு சிலைகளுக்கும் இரண்டு தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. சிலை இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது விநாயகர் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மைக் செட் வைத்த வாகனம், இதர வாகனம் என எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதி கிடையாது. விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்திலான ஷெட் அமைத்திருக்க வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சிலையை எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அல்லது துணை ஆட்சியரிடம் (Sub Collector) அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது. நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள் மற்றும் விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், மாயவன், வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்றப்பிரிவு சம்பத், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News