தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை: சரத்குமார் குற்றச்சாட்டு
தென் மாவட்டங்களில் போதிய அளவு தொழில் வளர்ச்சி இல்லாததால் கொலைகள் நிகழ்கின்றன என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.;
தென் மாவட்டங்களில் போதிய அளவு தொழில் வளர்ச்சி இல்லாததால் கொலைகள் நிகழ்கின்றன என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பால் சென்னை மக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கை நிறைவாக இல்லை பொதுமக்கள் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பேரிடர் காலங்களில் பேரிடரில் இருந்து பொதுமக்களை மீட்க சிறப்பு படை அமைக்க வேண்டும்.
தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் இதை மறந்து விடுகிறார்கள். தேர்தல் காலங்களில் இப்போது தெரிவிக்கும் எதிர்ப்பை காட்டினால் தான் ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறும்.
தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனியாக சந்திக்கும். அதிக தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும். தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கிறேன். அனைத்துக் கட்சிகளுமே தனியாக தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார்.