தூத்துக்குடி கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை: காவல்துறை தகவல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாளை, கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-05-20 14:40 GMT

தூத்துக்குடி கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என, காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 5 ஆவது ஆண்டு நினைவு தினமான மே 22 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே 21 ஆம் தேதி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என காவல் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு சம்பந்தமில்லாத நாளன்று (21.05.2023) பொதுமக்கள் கூடுகின்ற முத்துநகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கோரி வழக்கறிஞர் ஹரிராகவன் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு மனு அனுப்பி இருந்தார்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கத்திற்கு மாறான அந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு முறைப்படி மறுப்பு அறிவிப்பு அவருக்கு தெரிவிக்கப்பட்டது, அதை அவரும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இந்நிலையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மீண்டும், மீண்டும் முத்துநகர் கடற்கரையில் மேற்படி நிகழ்ச்சி நடக்க இருப்பதாக மக்களிடம் போலியான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்ததியை பரப்புபவர்கள் மீதும், அனுமதி மறுக்கப்பட்டதை மீறி முத்துநகர் கடற்கரையில் கூடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் நிர்வாகத்துறை மற்றும் காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்துகின்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News