ஊரடங்கால் வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லை : தமிழக அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே பேய்க்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கதலி, மலையேத்தம் மற்றும் ரசகதலி உள்ளிட்ட பல ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.இப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை தொடங்குவது வழக்கம் இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் வாழைத்தார்கள் தோட்டத்திலேயே பழங்கள் பழுத்து அழுகி வருகின்றன.
இதனால் அப்பகுதியில் வாழைத்தார் பயிரிட்ட விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்