தூத்துக்குடியில் தேசிய கடல் சாகசப் போட்டிகள் செப். 8 இல் தொடக்கம்
தூத்துக்குடியில் முதல் முறையாக தேசிய அளவிலான கடல் சாகசப் போட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியன் கயாக் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் அண்ட்கனோயிங் ஆகியவை சார்பில், தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் கடல் அலைச்சறுக்கு சாகசப் போட்டி மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் உள்ளிட்ட கடல் சாகசப் போட்டிகள் செப்டம்பர் 8 தேதி முதல் 10 ஆம் தேதி வரை முத்துநகர் கடற்கரையில் நடைபெற உள்ளது. போட்டிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைக்கிறார்.
இந்தப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மணிப்பூர் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்படுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் முறையாக சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக 20000 வழங்கப்படுகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆசிய அளவிலான போட்டி மற்றும் சர்வதேச அளவிலான கையாக் போட்டிக்கு தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் போட்டிக்கு தயாராகும் வகையில் தமிழக வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இந்த போட்டி நடத்தப்படுவதன் மூலம் இந்த கடல் சாகச விளையாட்டு போட்டியில் ஏராளமான மீனவ இளைஞர்கள் பங்கேற்று உலக அளவில் சாதனை படைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாக போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த போட்டிகள் நடைபெற காரணமாக இருந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு கயாக் அசோசியேசன் நிர்வாகிகள் சதீஷ்குமார், மெய்யநாதன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.