அரசு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையில் எழுதிய நாம் தமிழர் கட்சியினர்
தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் நாம் தமிழர் கட்சியினர் எழுதியதால் பரபரப்பு நிலவியது.
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தும் வகையில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில், கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைதீற்கும் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏராளமானோரும் கையெழுத்திட்டனர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் அந்த பதாகையில் கையெழுத்திட்டனர்.
அவர்கள், அந்த பதாகையில், தமிழக அரசே மது விற்பனை செய்து தமிழ்நாட்டை சீரழிக்காதே.. மது விற்பனையை தடை செய்... அரசு முதலில் திருந்தி சீமை சாராய விற்பனையை தடை செய்... என்று எழுதி அதன் அருகே தங்களது பெயரை கையெழுத்தாக எழுதினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையில் நாம் தமிழர் கட்சியினர் இவ்வாறு தமிழக அரசுக்கு எதிராக வாசகம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் கூறும்போது, தமிழகத்தில் அரசே மது விற்பனை செய்கிறது. அதே அரசு போதை ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இது நகைச்சுவையான செயலாக உள்ளது. அரசு மது விற்பனையை உடனே தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டுள்ளோம் என தெரிவித்தார்.