தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மரணத்தில் மர்மம்

தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-08 15:09 GMT

உயிரிழந்த மீனவர் சரவண பிரபாகரின் உறவினர்கள்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில், தூத்துக்குடி மாவட்டம், சாயல்குடி பகுதியை சேர்ந்த சரவண பிரபாகர் என்ற மீனவர் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி படகில் சக மீனவர்களான ஞான செல்வம், செல்வராஜ், பழனி, நிக்கோலஸ், அதிர்ஷ்டராஜ், சுவிட்சன், நிக்கோலஸ் மணி, சந்தன மாரிசெல்வம் ஆகியோருடன் கடலுக்கு சென்றுள்ளார். கடலுக்கு சென்ற மீனவர் சரவண பிரபாகர் தருவைகுளம் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மேல் தொலைவில் வைத்து இறந்து விட்டதாக படகு உரிமையாளர் சேகருக்கு சக மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கரைக்கு சரவணபிரபாகரின் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. கரைக்கு கொண்டுவரப்பட்ட சரவண பிரபாகரின் தலையில் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டு காயம் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து சரவண பிரபாகரின் உறவினர்கள் சக மீனவர்களிடம் அவர் எவ்வாறு இறந்தார் என்று கேட்ட பொழுது அவர்கள் சரியாக பதில் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

மீனவர் சரவணபிரபாகர் கடலில் குதிக்க முயன்றதாகவும் அதனால் தாங்கள் அவரை தனியாக படகில் ஒரு கம்பத்தில் கட்டி வைத்ததாகவும் கூறி உள்ளனர். மேலும், அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து சரவண பிரபாகர் கடலில் சக மீனவர்கள்ளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அடித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

மேலும், மீனவர் சரவண பிரபாகரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறிய அவரது உறவினர்கள், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மீனவர்களிடம் தருவைக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக உயிரிழந்த மீனவர் சரவணா பிரபாகரனின் மைத்துனர் ஜெயந்தன் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இறந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News