அனைவரும் கதர் துணிகளை வாங்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
நூற்பாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க அனைவரும் கதர் துணிகளை வாங்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள கதர் அங்காடியில் இன்று நடைபெற்ற உத்தமர் காந்தியடிகளின் 155 ஆவது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கதர் அங்காடிகள் இயங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக கடந்த ஆண்டில் ரூ. 92.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ. 45.61 லட்சம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. கிராமப் பொருட்கள் விற்பனை ரூ. 60.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கதர் விற்பனை குறியீடாக ரூ 2.10 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குறியீட்டினை அடைந்திடவும், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
முன்னதாக அண்ணல் மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், தூத்துக்குடி பனைவெல்ல நிறுவன மேலாளர் சரவணன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.