தூத்துக்குடி உலக தாய்ப்பால் வார விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணிகள், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இன்று உலகத் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உலக தாய்ப்பால் வார விழாவை துவங்கி வைத்தார். மேலும், அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர் வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
குழந்தைகளின் எதிர்காலம் நமது கையில் தான் இருக்கிறது. ஆகையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக தாய்ப்பால் ஆறு மாதம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் மார்பக புற்றுநோய், உள்ளிட்ட நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எனவே, தாய்மார்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டும்/
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
முன்னதாக தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். இதில்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.