தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை: போலீஸ் குவிப்பு

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பால் வியாபாரி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2023-12-01 12:07 GMT

கொலை செய்யப்பட்ட பால் வியாபாரி நந்தகுமார். (கோப்பு படம்)

தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இருசக்கர வாகனத்தில் சென்று பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம்போல பால் வியாபாரத்தை முடித்துவிட்டு நந்தகுமார் மீளவிட்டான் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது, மீளவிட்டான் குளம் அருகே மறைந்திருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நந்தகுமாரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் நந்தகுமாரின் தலைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்ட நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையெடுத்து, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நந்தகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நந்தகுமாரும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷும் இணைந்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்ததாகவும் அப்போது இருவருக்கும் இடையே பணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், பன்றிகளை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை பிரிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த விரோதத்தில் நந்தகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் சிப்காட் போலீசார் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கொலை நிகழ்ந்த நந்தகுமாரின் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News