தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு தடுக்க நடவடிக்கை: ஆட்சியர் விளக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்புகள் வருவதை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவக்கால மாற்றத்தினால் டெங்கு, டைபாய்டு, ப்ளு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் வருவதை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
பருவக்காழ மாற்றத்தால் பல்வேறு வகையான வைரஸ் பாதிப்புகள் மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை வைரஸ் பாதிப்பிற்க்கான அறிகுறிகளாக காணப்படுகிறது.
பொதுவாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாள்களில் குணமடைவர். பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்கவைத்து பின் ஆரவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் கல் உப்பை வெந்நீரில் கரைத்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்தல் வேண்டும்.
இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கு பகுதிகளை கைகுட்டை அல்லது துணியால் மூடி கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்திய துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும்போது மற்றவர்களிடமிருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளிவிட்டு விலகி இருக்கவேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்க்கு வரும்போது கை, கால்களை நன்கு சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தபிறகே வீட்டிற்க்குள் செல்லவேண்டும். இந்த தொடர் செயல்களின் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
காய்ச்சல் கண்டவர்கள் அரசு மருத்துவமனை, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பதிவுபெற்ற மருத்துவர்களை நாடி உரிய சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். வைட்டமின்-சி புரதசத்து மிகுந்து உணவுப்பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பினால் உள்நோயாளிகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் விபரங்களை பெற்று அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி வைரஸ் காய்ச்சல் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.