சுயஉதவிக் குழுவினரின் உற்பத்தி பொருள்களை விற்க மதி அங்காடி: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனைக்காக “மதி அங்காடி” தொடங்கப்பட உள்ளது என, ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.;

Update: 2023-09-01 09:02 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் முக்கிய சுற்றுலா தளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய “மதி அங்காடி“ அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய “மதி அங்காடி” மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் அங்குள்ள பொருட்கள் தரமாக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. எனவே, மதி அங்காடி செயல்படுத்திட ஆர்வமும், தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ஓராண்டு பூர்த்தி செய்து இருக்க வேண்டும். மேலும் தேசிய ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இணையதளத்தில் (NRML/NULM Portal) பதிவு பெற்றிருத்தல் வேண்டும். இந்த விதிமுறைகளின்படி தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் (2 ஆவது தளம்) மாவட்ட ஆட்சியரக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால்கள் மூலமாகவோ அல்லது நேரிலோ 11.09.2023-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News