தூத்துக்குடியில் கடல் பாதுகாப்பு ஒத்திகை: தீவிரவாதிகள் வேடத்தில் வந்த 17 பேர் கைது

தூத்துக்குடியில் நடைபெற்ற சாகர் கவாஜ் என்ற கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், கடல் பகுதியில் வழியாக ஊடுருவ முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்து, போலி வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-06-29 12:40 GMT

தூத்துக்குடியில் தீவிரவாதிகள் வேடத்தில் வந்த போலீசார் கைது செய்யப்பட்டனர்.

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருந்தனர். அந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தீவிரவாதிகள் அனைவரும் கடல் பகுதி வழியாக வந்து பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு ஆண்டுதோறும் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய குழுவினர் ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்

அந்த வகையில் கடல் பாதுகாப்பு குறித்து, ‘சாகர் கவாஜ்’ என்ற பெயரில் இரண்டு நாள் ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் மற்றும் காவல் துறையினர் ஒரே குழுவாக ஈடுபட்டனர்.

கடல் பகுதிக்குள் சோதனையிட்ட போலீசார் படகுகளில் செல்லும் மீனவர்களிடம் படகு எண் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா? என சோதனை செய்தனர். மேலும், கடலோர கிராமங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பழைய துறைமுகம் கடல்பகுதி வழியாக தூத்துக்குடிக்குள் ஊடுருவமுயன்ற 17 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த போலீசார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆர் டி எக்ஸ் ,டைம்பாம்,டெட்டனேட்டர் உள்ளிட்ட போலி வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News