தூத்துக்குடியில் ஆயுதம் மற்றும் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது
தூத்துக்குடியில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவைகளின் விற்பனையை கண்காணிக்கும் வகையில் பல்வேறு தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்டோ (47) என தெரியவந்தது. இதற்கிடையே, அன்டோ ஒரு சாக்கு பையை மறைத்து வைத்திருப்பதை அறிந்த தனிப்படை காவல்துறையினர் அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அண்டோ மறைத்து வைத்திருந்த சாக்கு பையில் 5 வாள்கள் மற்றும் போதை பொருள் போன்ற கிறிஸ்டல் கல் நிற பவுடரை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை காவல்துறையினர் அண்டோவை கைது செய்து அவரிடம் இருந்த 5 வாள்கள் மற்றும் 615 கிராம் போதை பொருள் போன்ற கிரிஸ்டல் கல் நிற பவுடரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்டோவிடம் போதைப் பொருட்கள் எப்படி வந்தது? இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.