கடம்பூரில் அரிவாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது

கடம்பூர் பகுதியில் கையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-06 09:30 GMT

கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் "சண்டியர் மூர்த்தி" (sandiyar moorthy) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையிலான மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் உலகநாதன் உட்பட மணியாச்சி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கணேச மூர்த்தி (21) என்பவர் கையில் அரிவாளுடன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கடம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News