கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி மா.ஆண்டோபீட்டர் காலமான தினமின்று
சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் காலமான தினமின்று!
கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் காலமான தினமின்று!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணினி மென்பொருள் துறையில் 3 ஆண்டு பட்டயப்படிப்பையும், கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், மேலாண்மையியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கும் இவர் சென்னையில் சாஃப்ட்வியூ எனும் பெயரில் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தவர். இதன் மூலம் தமிழ் மென்பொருள் தயாரித்தல், கணினி, இணையம், பல்லூடகம், எழுத்து வரைகலை, அசைவூட்டம், காட்சி சார் தொடர்பு போன்ற கணினி சார்ந்த துறைகளுக்கு தமிழில் பயிற்சியும் அளித்து வந்தார்.
கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்து விதமான படைப்புகளையும் இணையதளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.
தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 ல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் சென்னையில் 2012 ம் ஆண்டு ஜூலை 12 ம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்.
இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.