தூத்துக்குடியில் நடப்போம் நலம்பெறுவோம் ஆரோக்கிய நடை திட்டம் தொடக்கம்
தூத்துக்குடியில் நடப்போம் நலம்பெறுவோம் ஆரோக்கிய நடை திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்- ஆரோக்கிய நடை என்ற ஹெல்த் வாக் சாலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தூத்துக்குடி கடற்கரை சாலையில், பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பெல் ஹோட்டல் முன்புறம் முடியும் வகையில் 8 கிலோ மீட்டர் தொலைவு நடைப்பயிற்சி நடைபெற்றது.
மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் மட்டுமல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்களையும் படகோடு திரும்ப பெற மத்திய அரசின் உள்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து இருக்கிறார்.
தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவில் தவறுதலாக போகும்போது பிடிபட்டு இருக்கிறார்கள். 12 பேரரையும் விடுதலை செய்கிறோம், படகை பிடித்துக் கொள்கிறோம் என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து படகோடு அந்த மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.