தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாக தயாராகும் ஆகாயத்தாமரை கைவினைப் பொருட்கள்!
தூத்துக்குடியில் ஆகாயத்தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரைகளை கொண்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த மதிப்புக் கூட்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஆகாயத்தாமரை குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் இசாம் அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தும் தூத்துக்குடி ஆகாயத்தாமரை குழுமத்திற்கான முதல் தொகுப்பு பயிற்சி முகாமினை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
தமிழக அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அந்தவகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஒரு கோடிக்கு குறைவான முதலீட்டில் இயங்கும் குழுமங்களின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உதவிபெறுவதற்கு குறைந்தபட்சம் 20 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.
குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குழுமம் உள்கட்டமைப்பு வசதி, உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல், தரக்கட்டுப்பாடு பரிசோதனைக் கூடம் மற்றும் பொதுவான வசதி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சமாக 7.5 கோடி வரையிலான உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஒருகுழுமம் கொண்டுவரப்படும் போது ஏற்கெனவே உள்ள திட்டங்களின் கீழ் கிடைக்கும் வளங்களும் அதேகுழுமத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றியுள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை தண்டுகள் மற்றும் இலைகளை சேகரித்து கைவினைப் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் செய்வதால், நீர்நிலைகள், இயற்கைவளங்கள் பாதுகாக்கப்படுகிறது. இங்கு உள்ள மகளிர்கள் ஆகாயத்தாமரையில் இருந்து கூடை, கேன் பேக், மலர் ஜாடி, மிதியடி, பானை, குப்பைத்தொட்டி, கல்வி உபகரணங்கள் வைக்கும் பெட்டி, மளிகைப்பொருட்கள் வைக்கும் அஞ்சரைப்பொட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைப்பொருட்கள் தயாரித்து வருகிறார்கள்.
மேலும், உள்ளுர் மகளிர்களின் திறன்களை மேம்படுத்தி நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 25 உறுப்பினர்களுடன் தூத்துக்குடி ஆகாயத்தாமரை குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அமைய இருக்கும் ஆகாயத்தாமரை உற்பத்தி அலகில் இருந்து முதல்கட்டமாக வெளிநாடுகளில் தற்போது அதிக தேவைப்படும் வட்ட வடிவிலான (16அங்குலம் அளவிலான) 2 லட்சம் மேஜை விரிப்புகள் முதலாமாண்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே, மகளிர்கள் ஆர்வத்தோடு தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்டு பல்வேறு தரமான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு மகளிர்களும் தங்களுக்குள்ளே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிக் கொண்டு, உலகத் தரத்திலான கைவினைப்பொருட்களை தயாரிக்க வேண்டும். நீங்கள் ஆகாயத்தாமரையில் இருந்து தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆகாயத்தாமரை தண்டுகள் மற்றும் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் உபபொருட்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜனகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.