தூத்துக்குடி நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு
தூத்துக்குடியில் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள நகைக்கடை மற்றும் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி நகரில் மத்திய பகுதியில் உள்ள தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் தூத்துக்குடியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் எஸ்.எஸ்.எம். என்ற பெயரில் நகைக் கடை மற்றும் நகை அடகு பிடிக்கும்கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் காலையில் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடையின் உள்பகுதியில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மத்திய பாகம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த மத்திய பாகம் பிரிவு போலீசார் கடையில் சோதனை செய்தனர். இதில், மர்மகும்பல் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 8 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
மேலும், கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கடையில் இருந்த சிசிடிவி கேமரா உடைத்து ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளது. திருட்டுச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடியில் நகரின் மத்திய பகுதியில் உள்ள நகை கடை உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பலா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.