தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-22 12:57 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மிகப்பெரிய அளவிலான மழை பாதிப்புகளை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தொடர்ச்சியாக 17 ஆம் தேதி முதல் நேற்று வரை 190 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் மற்றும் 4 பணியாளர்களுடன் ஒரு நாளைக்கு 4 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முகாமிலும் 100 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை 2082. இதில் சிகிச்சை பெற்றவர்கள் 66766 பேர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 134 பேர், இருமல், சளி உள்ளவர்கள் 1341 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் 48 மருத்துவ வாகனங்கள் சுற்றி வருகிறது. புறநகர் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் நடத்திட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


இதனால் தென்காசி, கன்னியாகுமரியில் இருந்து வாகனங்கள் கொண்ட வரப்படுகின்றன. அதுமட்டுமல்ல மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் இருந்து மருத்துவர்கள் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளார்கள். தூத்துக்குடி மருத்துவ கல்லூரி தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் பெரிய அளவில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் ஐசியூவில் ஜெனரேட்டர் மூலம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பான வகையில் நிலைமையை கையாண்டு இருக்கின்றனர். இருதவியல் கருவிகள் மட்டும் தூக்க முடியாததால் சேதம் அடைந்திருக்கின்றன. சென்னையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் வந்து அதனை எவ்வளவு விரைவில் இயங்க செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இயங்க வைப்பார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மோட்டார்கள் மூலம் நீரை எடுத்து வருகிறார்கள். மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்கிறது.

தனியார் மருத்துவத்துறையையும் பயன்படுத்த பேசியிருக்கிறோம். காப்பீட்டு திட்டத்தில் உள்ள மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்த இருக்கிறோம். இன்னும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

உள்ளாட்சி துறை மூலம் ஏராளமான மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான எல்லா வார்டுகளுக்கும் மின் இணைப்பு தரப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் உயிரிழப்புகளை கணக்கெடுத்து வருகிறது. முக்கியமான இடங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. காலை உணவு நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் நாங்கள் வழங்கியிருக்கிறோம். எல்லோரும் திருப்தியாக தெரிவித்தார்கள். நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கும் உணவு, தண்ணீர் தரப்பட்டிருக்கிறது.

கடந்த 6 மாதங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இருந்தது. சிங்கப்பூரில் 4000 அளவிற்கும், கேரளாவில் 400 அளவிற்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. தமிழ்நாட்டில் புதிதாக தொண்டை வலி, இருமல் பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று வரை ஒட்டுமொத்த பாதிப்பு 23. இவர்கள் நன்றாக இருக்கிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள் எடுத்து கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்துசெல்வதுதான் பாதுகாப்பானது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி இயக்குநர் சங்குமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News