தூத்துக்குடி தூய பனிமய மாதா சொரூபத்தில் தங்க முலாம் பூசும் பணி துவக்கம்
புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு மாதா சொரூபத்தில் தங்க முலாம் பூசும் பணி தொடங்கியது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
மேலும், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கத் தேர் திருவிழாவும் நடைபெறுவது உண்டு. கொரோனா பரவல் காலத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்றது. ஆலய வளாகத்தில் மட்டும் தேர் பவனி நடைபெற்றது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பனிமய மாதா ஆலய திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு தங்கத் தேர் திருவிழாவும் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தங்க தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தங்க முலாம் பூசுவதற்காக மாதா சொருபம் சிம்மாசன பீடத்தில் இருந்து திருப்பலி மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இறக்கப்பட்டது. பலி பீடத்தில் இருந்து இறக்கப்பட்ட மாதா சொரூபம் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாதாவை தரிசனம் செய்து வருகின்றனர்.
தங்க கிரீடத்துடன் காட்சியளிக்கும் மாதாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து ஜெபமாலை மற்றும் பல்வேறு பொருட்களை மாதாவின் பீடத்தில் வைத்தும், தங்களது குழந்தைகளையும் மாதாவின் பீடத்தில் வைத்து ஆசி பெற்று வருகின்றனர்.
பனிமய மாதா சொரூபத்தில் தங்க முலாம் பூசும் பணி ஜூன் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பணி 15 நாள்கள் வரை நடைபெறும் எனக் கூற்படுகிறது. தங்க முலாம் பூசும் பணி நிறைவு பெற்ற பிறகு தூய பனிமய மாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் அவருக்குரிய சிம்மாசனத்தில் அமர்த்தப்படும் என பேராலய நிர்வாகக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.