காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

வருவாய்த்துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலகம் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2023-04-08 15:31 GMT

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வருவாய்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான நான்கு ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும், பணி இறக்கத்தை தடுக்கும் வகையிலான அரசாணையை வெளியிட வேண்டும், மக்களின் உயிரைப் பாதுகாக்க செயல்பட்ட பேரிடர் மேலாண்மை பணியிடத்தை மீண்டும் உருவாக்க வேண்டும், மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்த கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மே மாதம் ஐந்தாம் தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருவாய்த் துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும். நான்கு முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை மே மாதம் 5 ஆம் தேதி முற்றுகையிட்டு வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முருகையன் தெரிவித்தார்.

Tags:    

Similar News