தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை

தூத்துக்குடி அனல் மின் நிலைய பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆறு மணி நேரம் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்

Update: 2023-09-20 13:36 GMT

தூத்துக்குடி அனல் மின்நிலைய வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை முடித்துக் கொண்டு காரில் வெளியே வரும் வருமானவரித்துறையினர்.

தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றினர். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி உறவினர்கள் அவருடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் எனத் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பணியை மேற்கொண்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கரி கையாளும் பகுதியில் மத்திய வருமானவரித்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6;30 மணி அளவில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், சென்னை ராதா இன்ஜினியரிங் துணை நிறுவனமான திவ்யா டிரேடர்ஸ் என்ற சாம்பல் கையாளும் நிறுவனத்தின் கணக்குகள் குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். இதேபோன்று, தூத்துக்குடி துறைமுகத்தில் கரி கையாளும் தளத்தில் செயல்பட்டு வரும் சென்னை ராதா இன்ஜினியரிங் சார்பில் கப்பலில் இருந்து கரி இறக்கும் பகுதி என இரண்டு இடங்களிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனம் பல்வேறு பணிகள் செய்யாமல் பணம் எடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு பல்வேறு பணிகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை சுமார் 6:30 மணி முதல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பகுதி, சாம்பல் கையாளும் பகுதி மற்றும் அனல் மின் நிலைய அலுவலகம் ஆகியவற்றில் ராதா இன்ஜினியரிங் மேற்கொண்ட பணிகள் குறித்த ஆவணங்களை வருமான வரிதுறை அதிகாரிகள் குழுவினர் சுமார் ஆறு மணி நேரமாக சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு பின் முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News