தூத்துக்குடியில் ரூ. 30 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீஷ் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் ரூ. 30 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீஷ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சத்தை பதுக்கி வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.;
கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன்.
கடல்வாழ் உயிரினமான திமிங்கலம் அடிக்கடி வெளியேற்றும் உமிழ்நீர் போன்ற எச்சம் கடலில் மிதப்பது உண்டு. ஆம்பர் கிரீஷ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் எச்சத்துக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கடலில் கிடைக்கும் திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஷை சிலர் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வது உண்டு.
ஆம்பர் கிரீஷில் இருந்து நறுமண பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படும் என்பதாலும் வெளிநாட்டில் அதிக தொகை கிடக்கும் என்பதாலும் சிலர் ஆம்பர் கிரீஷை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பர் கிரீஷ்.
இந்த நிலையில், திமிங்கலம் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஷை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிஷ் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன் ஆகிய நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரிஷீன் மதிப்பு 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஷை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.