தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கைதான 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 16.08.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவரை முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த வழக்கில், தூத்துக்குடி பழையகாயல், தேவர் காலனியை சேர்ந்த லெட்சுமணன் (27), சாத்தான்குளம் வீரஇடைகுடி பகுதியை சேர்ந்த செல்லப்பா (23), விளாத்திகுளம் சூரங்குடி சி.ஆர் காலனியை சேர்ந்த கணேசமூர்த்தி (23) மற்றும் சாத்தான்குளம் முதலூர் ரோடு பகுதியை சேர்ந்த ஆண்டோ வின்ஸ்டன் (20) ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட லெட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி மற்றும் ஆண்டோ வின்ஸ்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 22.08.2023 அன்று கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு ராஜாப்புதுக்குடி பகுதியில் விற்பனைக்காக கண்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த ஜான் அற்புத பாரத் (33) மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா சிட்டிபாபு (39) ஆகியோரை கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும் சீக்கட்லா சிட்டிபாபு ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் 7 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கொலை மற்றும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான லெட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி, ஆண்டோ வின்ஸ்டன், விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா சிட்டிபாபு ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை, பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 123 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.