தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-07-28 09:35 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் கழுகுமலை வள்ளிநாயகபுரத்தை சேர்ந்தவர்களான மாரிமுத்து (30), பாண்டிசெல்வம் (22), பால்ராஜ் (35) மற்றும் காளிராஜ் (26) ஆகிய நான்கு பேரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் கைதான மாரிமுத்து, பாண்டிசெல்வம், பால்ராஜ் மற்றும் காளிராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 10.07.2023 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 வயது பெண்ணை பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஏரல் பெருங்குளம் சந்நதி தெருவை சேர்ந்த முத்துராம்குமார் என்ற தங்கம் (27) மற்றும் குரும்பூர் புறையூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் (23) ஆகியோரை குரும்பூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான முத்துராம்குமார் என்ற தங்கம் மற்றும் சுபாஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மேரி ஜெமிதா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கழுகுமலை வள்ளிநாயகபுரத்தை சேர்ந்தவர்களான மாரிமுத்து, பாண்டிசெல்வம், பால்ராஜ், காளிராஜ், ஏரல் பெருங்குளம் சந்நதி தெருவை சேர்ந்த முத்துராம்குமார் என்ற தங்கம் மற்றும் குரும்பூர் புறையூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News