அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.;
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், மாநில திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்டத்தில் ஏற்கெனவே தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
முதலமைச்சரின் உத்தரவுபடி 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முதலமைச்சர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார். உங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நலன்களிலும் அக்கறை கொண்டு இலவச பேருந்து பயணம், 1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் காலை முதல் இரவு வரை விடாது பணி செய்பவர்கள் பெண்கள் தான். அதை கருத்தில் கொண்டு தான் வழங்கப்படுகிறது.
இதில் விடுபட்டு முறையிட்டவர்களுக்கும், தகுதியான அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும். கடந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற வெள்ளப் பாதிப்பின் போதும், தற்போது ஏற்பட்ட பாதிப்பின் போதும், அமைச்சர் உதயநிதி அனைத்து பகுதிகளுக்கும் சென்று நலத்திட்டங்கள் வழங்கி அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
விழாவில், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.