தலைமுறையை அழிக்கும் பழிக்குப்பழி என்ற எண்ணம்: தூத்துக்குடி எஸ்.பி. பேச்சு
பழிக்குப்பழி என்ற எண்ணம் ஒரு தலைமுறையையே அழித்துவிடும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.;
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலப்பேரி இந்து நாடார் திருமண மஹாலில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:
கிராமங்களில் எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் இருப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என யாரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிடாமல் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம்மில்லா மாவட்டமாக மாற்றுவதும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
இளைஞர்கள் கோபத்தினால் குற்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களது எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். கோபத்தினால் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான்.
கோபப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுபவன் அவனது எதிர்காலத்தை இழப்பதோடு அவனது குடும்பமும் பாதிப்படையும். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க கற்று கொடுங்கள். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் கோபத்தை குறைத்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துகொள்ள உதவுங்கள். அப்போதுதான் சமுதாயம் நல்ல முறையில் வளர்ச்சியடையும். உங்கள் குழந்தைகள் எவ்வித சூழ்நிலையிலும் கல்வி பயில செய்யுங்கள். கல்வி ஒன்று தான் அவர்களுக்கு பெற்றோர்கள் அளிக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.
பழிக்குப்பழி என்ற எண்ணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்லாது ஒரு தலைமுறையை அழித்துவிடும். பழிக்குபழி என்ற எண்ணத்தை கைவிட்டு, ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இரு கிராமங்களில் வசிப்பவர்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினையை சாதி பிரச்சினையாகவோ, பொதுப்பிரச்சினையாகவோ ஆக்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்து சுமூகமாக தீர்ப்பதற்கு முயல வேண்டும். உங்கள் ஒவ்வொருவருடைய மாற்றமும் சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இளைஞர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நம்முடைய சந்ததிகளுக்கு நிம்மதியான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்கி கொடுப்பது நமது பொறுப்பாகும். அதனால் நாம் ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினரின் முன்னிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் புளியம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், மணியாச்சி காவல் நிலைய ஆய்வாளர் சுதந்திர தேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.