கனமழை பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர் உயிரிழப்பு: தலைமைச் செயலாளர் தகவல்

Heavy Rain 22 Persons Dead கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-24 14:43 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Heavy Rain 22 Persons Dead

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்கு உள்ளானது. தற்பொழுது தூத்துக்குடியில் மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. ஆனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிற்கிறது. அந்தப் பகுதியில் நிறைய தாழ்வான பகுதிகள் இருக்கிறது.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள தண்ணீர் எல்லாம் பக்கிள் ஓடை வழியாகத்தான் கடலில் வடியணும். அந்த பக்கிள் ஓடையில் தண்ணீர் போய்க்கிட்டு இருக்கிறது. நிறைய மின்மோட்டார் பம்ப்கள் வாங்கியிருக்கிறோம். எங்கெங்கெல்லாம் பம்ப் போட வேண்டுமோ அங்கெல்லாம் பம்ப்கள் போடப்பட்டு கூடுதலாக இப்போது தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள கால்வாயின் அளவு போதுமான அளவில் இல்லை. இந்த அளவுக்கு மழை பெய்யும்போது எந்த அளவு பெரிய குளமாக இருந்தாலும் தண்ணீர் நிரம்பிதான் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை எல்லா தண்ணீரும் கடலுக்குத்தான் போகணும். எந்த அளவுக்கு மழை பெய்தது என்று தோரயமாக கணக்கீட்டு பார்த்ததில் 40 மணி நேரத்தில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பரப்பளவை பார்க்கும்போது 8500 சதுர கிலோ மீட்டர். இந்த 8500 சதுர கிலோ மீட்டர்லேயும் 50 சென்டி மீட்டர் மழை. அதாவது அரை மீட்டர். அதை பார்க்கும்போது, மேட்டுர் அணையில் பாதி 150 டிஎம்சி. அதாவது இங்கே மணிமுத்தாறு, பாபநாசம் அணைக்கு இரண்டு மடங்கு தண்ணீர் எல்லாம் கடலுக்குத்தான் போகணும்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு தினங்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும்.

தூத்துக்குடியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதன் மூலம் நிறைய நன்மைகள் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான வீடுகளின் சுவர் இடிந்தும், நீரில் மூழ்கியும் 22 நபர்கள் இறந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரேசன் கார்டு அடிப்படையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். விரைவில் அந்த பணிகளும் தொடங்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்தார்.

Tags:    

Similar News