தூத்துக்குடியில் நகைகளுக்காக பெண்ணை கொன்றதாக கைதானவர் மீது குண்டர் சட்டம்

தூத்துக்குடி அருகே பெண் கொலை வழக்கில், கைதானவர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update: 2023-05-19 13:46 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்ப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கில் கைதானவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.

கடந்த 30.04.2023 அன்று ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி இந்திராணி (48) என்பவரை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த ராமசாமி (43) என்பரை ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைதான ராமசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் பெண் கொலை வழக்கில் கைதான ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ராமசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News