ஆளுநர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசலாம்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
ஆளுநர் என்பவர் அரசியல் தாண்டி மக்கள் பிரச்னைகள் குறித்து பேசலாம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென் மாவட்டங்களில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மது அருந்துவதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் உண்டாகின்றது. மேலும் மது அருந்துவதால் கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்படுகிறது. மேலும் மதுக்கடையினால் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது. தமிழகத்தில் மது விற்பனை என்பது நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு கொண்டு வராவிட்டால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் முன்பு பெண்களை திரட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் மதுபாட்டிகள் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் என்பது அவரது பணியில் எந்த அளவிற்கு பணி சுமை இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மையை வெளிபடுத்த வேண்டும். அண்மைக்காலமாக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு சிக்கி வருகின்றனர்.
ஒருவேளை அந்த வகையில் ஏதேனும் பிரச்னை காரணத்தால் கோவை சரக டிஐஜி தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என சிபிஐ கொண்டு விசாரணை நடத்த வேண்டும். ஒரு ஆளுநர் என்பவர் அரசியல் விசயங்களை தாண்டி மக்கள் பிரச்னைகள் குறித்து நிச்சயமாக பேசலாம். அதில் தவறு ஏதும் இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.