G.k.Vasan Interview At Tuticorin நீட் தேர்வை வைத்து மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது: ஜி.கே. வாசன் பேட்டி

G.k.Vasan Interview At Tuticorin நீட் தேர்வை வைத்து மாணவர்களிடம் அரசியல் செய்யக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.;

Update: 2023-11-16 14:18 GMT

தூத்துக்குடியில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. போதைப்பொருள் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை இந்த அரசு தடுக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்வது அரசின் கடமை. தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அவர்கள் அடக்க வேண்டும்.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய மீனவர்களை அச்சுறுத்துவதும் தாக்குவதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தேர்தல் வாக்குறுதியை இரண்டரை வருடம் கழித்தும் நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசு தான். மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எனவே, நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்கு தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரிக்கும். அதில் மாற்று கருத்து கிடையாது. கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் முறையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி மாணவர்களுடைய மனநிலையை குழப்புவது பெற்றோர்களுடைய எதிர்பார்ப்பை மாற்றக் கூடிய ஒரு நிலை எடுப்பது என்பது ஒரு தவறான செயல். கல்வியிலே அரசியலை ஒருபோதும் புகுத்த கூடாது.

திமுக தொடர்ந்து அதை செய்து கொண்டிருப்பது தவறான ஒன்று. நீட் தேர்வு அகில இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும் போது தமிழக மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியிலே அதற்கு உண்டான சதவீதத்தை விசேஷமாக ஏற்படுத்தி ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உத்திரவாதத்தை கொடுத்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலே இன்றைக்கு மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் என கூறிக்கொண்டு மாணவர்கள் பரீட்சை எழுதுபவர்களை குழப்புவது தேவையற்ற ஒன்று. மாணவர்களும் பெற்றோர்களும் திமுக செய்கின்ற இந்த கல்வி அரசியலை ஏற்கமாட்டார்கள். குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News