மக்கள் வரிப்பணத்தில் நிவாரணம் வழங்குவதா? முதல்வருக்கு சீமான் கேள்வி

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் நிவாரணம் வழங்குவதா? என முதல்வருக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-05-16 14:52 GMT

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து நிவாரண உதவி வழங்குவதா? என தமிழக முதல்வருக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநாடு தூத்துக்குடியில் மே 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்வையிட்டார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவத்தில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்.

கள்ளச்சாராயம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றால் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அப்போதே பதவி விலகி இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்தும் கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு குறைய வேண்டும் என்றால் மாற்று அரசு வேண்டும்.

தி.மு.க.வின் சொத்து பட்டியலை மட்டும் வெளியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை ஏன் வெளியிடவில்லை. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று இதுவரை தெரியவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணிமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News