மணல் திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்ற மணல் திருட்டு வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, புகையிலைப் பொருட்கள் கடத்தல், மணல் திருட்டு, போக்சோ வழக்கு உள்ளிட்டவைகளில் கைது செயய்படுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஶ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் திருட்டு வழக்கில் கைதானவர் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24.05.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுபடுகையில் 10 மூட்டை ஆற்று மணல் திருடிய வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற கருப்பசாமி (27) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மணல் திருட்டு வழக்கில் கைதான கண்ணன் என்ற கருப்பசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மணல் திருட்டு வழக்கில் கைதான ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற கருப்பசாமி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் உடனடியாக கண்ணன் என்ற கருப்பசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 77 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.