ஸ்ரீவைகுண்டத்தில் கொள்ளை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிகழ்ந்த கொள்ளை வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.;
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 50-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 07.03.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளரான ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் தங்கராஜ் (50) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து அவரை தாக்கி அவர் வைத்திருந்த ரூபாய் 1,90,070/- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் மகன் மணிகண்டன் (23), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து (24) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கொம்பையா (27) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான மணிகண்டன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கடந்த 13.04.2023 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதான மற்றொருவரான கொம்பையா மீது நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொள்ளை வழக்கில் கைதான தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கொம்பையாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் கொள்ளை வழக்கில் கைதான கொம்பையாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.