ஆசிரியர் தேர்வாணைய தேர்வுக்கு தூத்துக்குடியில் இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்

ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட உள்ள தேர்வுக்கு தூத்துக்குடியில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.;

Update: 2023-08-17 14:25 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (TRB) ஆண்டு திட்ட நிரலில் 6553 இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teachers) காலிப் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் 3587 பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) காலிப் பணியிடங்களுக்கான தேர்வும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளது. மேலும் வாரம்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நேரில் வர இயலாத பட்சத்தில் தகுதியுடையோர் தங்களது செல்போனை பயன்படுத்தி Thoothukudi Employment office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google Form- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த இலவச பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0461 - 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஆசிரியர் தேர்வாணையத்  தேர்வுக்கு தயாராகி வருவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News