ஆமை வேகத்தில் அரசின் செயல்பாடு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!
தூத்துக்குடியில் அதிக கனமழை பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் செயல்பாடு ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது ஆனால் 8 நாட்கள் ஆகியும் 3 ஆம் மைல் பகுதி அருகே உள்ள திருவிக நகர் பகுதியில் தற்போது வரை மழை நீர் வடியவில்லை. அந்தப் பகுதிகளை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், சண்முகநாதன், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு அந்தப் பகுதி மக்களுக்கு உணவுகள் வழங்கினர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 8 நாட்களாகியும் தற்போது வரை பல இடங்களில் மழை நீர் எடுக்கவில்லை. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும். அதே போன்று பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 6ஆயிரம் போதாது. 15 ஆயிரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.
மழை நீரில் பாதிக்கப்பட்ட இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை பழுது நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் நிதியை எதிர்பார்காமல் மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை என்பது எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் செயல்பாடு ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. குளோரின் மாத்திரை கொடுப்பதை ஒரு சாதனையாக பேசி வருகின்றனர் அமைச்சர்கள். தனியார் மருத்துவமனை முகாம் போடப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் எங்கும் முகாம்களே நடைபெறவில்லை என்பது தான் உண்மை. மேலும், இறந்தவர் குடும்பங்கள் நிராயுதபாணியாக உள்ளன. 57 பேர் இறந்ததாக கள நிலவரம், ஆனால் அரசு புள்ளி விபரம் 30 என்று கூறுகின்றனர் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.