குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர்

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்

Update: 2023-09-15 14:07 GMT

இஸ்ரோ முன்னாள் தலைவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் சமீபத்தில் ஓய்வு பெற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தற்போது பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவ, மாணவிகளை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் பேசினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம்  இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியதாவது:நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 சிறப்பாக தரை இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்து, சூரியனுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 இன்னும் நான்கு மாதத்தில் ஆய்வுப் பணியை தொடங்கும்.

நமது நாட்டில் இனி தனியார் துறையினரும் ராக்கெட் ஏவுவார்கள். இதுவரை 140 தனியார் நிறுவனங்கள்  ராக்கெட் ஏவுவதற்கு தயாராகி வருகின்றனர். அடுத்ததாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக உள்ளது . தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஏற்கெனவே 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு கட்டுமான பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும்.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்தில் இருந்து ஓராண்டுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதால் அந்தப் பகுதி மக்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார். பேட்டியின்போது, தூத்துக்குடி வஉசி கல்லூரி செயலர் சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News