தூத்துக்குடி மாவட்டத்தில் 34 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 34 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-12-02 14:46 GMT

தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் புகையிலப் பொருட்கள் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் ஆகியோரது ஒருங்கிணைப்பில், காவல் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக, மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் பெறப்பட்ட பரிந்துரையின் படி, 34 கடைகளை மூடி சீல் வைக்க மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவிட்டார்.

இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் 34 கடைகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மூடி, சீல் வைக்கப்பட்டு, அந்தக் கடைகள் உணவு பாதுகாப்புத் துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன. விசாரணை நிறைவுற்ற பின்னர், உணவு பாதுகாப்புத் துறை சார்ந்த குற்றத்தை உறுதி செய்து, நியமன அலுவலரால் அபராதம் விதித்து உத்திரவிடப்படும்.

சம்பந்தப்பட்ட வணிகர்கள் விதிக்கப்பட்ட அபராதத்தினை கருவூலத் துறையின் இணையதளம் மூலமாக செலுத்தி, அதற்கான சலான் நகலை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே, கடைகள் மீண்டும் திறக்கப்படும். தவறினால், அபராதம் செலுத்தும் காலம் வரை கடைகள் மூடி, சீல் வைத்த நிலையிலேயே இருக்கும்.

மேலும், காவல் துணை கண்காணிப்பாளர்களின் பரிந்துரை பெறப்பட்ட மற்ற 120 கடைகளும் அடுத்துவரும் தினங்களில் ஆய்வு செய்யப்பட்டு, மூடி சீலிடப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News