தூத்துக்குடி நகரை சூழ்ந்த வெள்ளம்: வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு..!
தூத்துக்குடி மாநகரில் வீடுகளை சூழ்ந்து மழை வெள்ள நீர் காணப்படுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.;
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே இந்த மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட அணை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காரையாறு, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தாமிரபரணி ஓடும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து காணப்படுகிறது.
தண்ணீர் வரத்து அதிகமாகிக் கொண்டே இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பி மறுகால் விழுந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உழக்குடி, கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் நகரின் நோக்கி வருவதால் தூத்துக்குடி மாநகரில் ஏற்கெனவே தேங்கியுள்ள மழை நீர் கூடுதலாக சேர்ந்து வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, தபால் தந்தி காலனி, இந்திரா நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிகளவு தண்ணீர் தேங்கி விட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விமான சேவை, ரயில் போக்குவரத்து ஆகியவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பேருந்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகள் முழுவதும் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் அதிக அளவு சூழ்ந்துள்ளதாலும் வீடுகளுக்குள் தண்ணீர் அதிக அளவு புகுந்ததாலும் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இருப்பினும் ஆங்காங்கே மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தனி குழுக்களும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டு ஆங்காங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளம் முற்றிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புறவழிச் சாலையில் தண்ணீரில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதை சரி செய்யும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பக்கிள் ஓடையில் தண்ணீர் போக்கு இருந்த போதிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் அதன் அருகே உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. எனவே மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறி அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு போலவே தற்போதும் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி தண்ணீருக்குள் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்வது நின்றால் மட்டுமே வீடுகளில் சிக்கி உள்ளோர் வெளிய வர முடியும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, குழந்தைகளை வைத்திருப்போர், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகரில் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.