தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மீனவ கிராம மக்கள் திடீர் முற்றுகை

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பெரியதாழை மீனவ கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-07-10 07:48 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெரியதாழை மீனவ கிராம மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது பெரிய தாழை மீனவ கிராமம். இந்த மீனவ கிராமத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர் கூட்டுறவு சங்க மூலம் பைபர் படங்குகளுக்கு, ஒரு படகிற்கு மாதம் தோறும் 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கூட்டுறவு சங்க பணியாளர் சுமதி, மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய மண்ணெண்ணெய் முறையாக வழங்காமல் பாதி அளவு மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கிவிட்டு மீதியை மண்ணெண்ணெய் வெளி சந்தையில் விற்பனை செய்து முடிக்கட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

மேலும் மீனவர்களுக்கு மானிய விலையில் வந்த மீன்பிடி படகு இஞ்சினையும் முறையாக வழங்காமல் மீனவர் கூட்டுறவு சங்க ஊழியர் சுமதி முறைகேடாக மற்றவர்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக முறைகேட்டில் ஏற்படும் ஈடுபடும் மீனவர் கூட்டுறவு சங்க பணியாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியதாழை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை கூட்டுறவு சங்க பணியாளர் சுமதி மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று நூற்றுக்கணக்கான ஆண் பெண் மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண் மீனவர் ஒருவர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு கண்டுகொள்ளாததால் தரையில் படுத்து உருண்டு தங்கள் எதிர்ப்பு பதிவு செய்தார். இதையெடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News