ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு
தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைக்குளம், வைப்பாறு, வேம்பார், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர் தினமும் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்பிவிடுவது வழக்கம். இதேபோல, நாட்டுப்படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்வோர் பல நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்து திரும்புவது உண்டு.
இந்தநிலையில், தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தேவதாஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் கடந்த ஏழாம் தேதி ஆழ்கடல் தங்கி மீன் பிடிப்பதற்காக ஜவகர் உள்ளிட்ட 8 மீனவர்கள் நாட்டுப் படகில் கடலுக்குச் சென்று உள்ளனர். நேற்று இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஆழ் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது திடீரென பலத்த காற்று வீசியுள்ளது.
இதன் காரணமாக படகு அதிகப்படியாக தள்ளாடியதால் படகில் இருந்து மீனவர் ஜவகர் தவறி கீழே கடலுக்குள் விழுந்துள்ளார். கடலில் தத்தளித்த ஜவகர் மூச்சு திணறி பரிதாபமாக பலியானார். இதற்கிடையே, கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஜவகரின் உடலை சக மீனவர்கள் மீட்டு இன்று காலை கரைக்கு கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து பலியான மீனவர் ஜவகரின் உடல் பரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட மீனவர் ஜவகரின் சடலத்தை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் கடற்கரைப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.