Family Planning Awareness Vehicle தூத்துக்குடியில் குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
Family Planning Awareness Vehicle தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
Family Planning Awareness Vehicle
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிறப்பு முகாம்கள் இன்று முதல் வருகின்ற 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல கருத்தடை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இருவார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்பநல துறையின் மூலம் தகவல் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான குடும்பநல கருத்தடை செய்வதைவிட எளிமையானது மயக்கமருந்து கொடுப்பதில்லை. கத்தியின்றி இரத்தமின்றி செய்யப்படுகிறது. தையல் இல்லாததால் தழும்பு தெரியாது மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம். இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குடும்ப நல கருத்தடை முறை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஈட்டுத்தொகையாக அரசால் வழங்கப்படும் ரூபாய் 1100 வழங்கப்படும். மேலும் ஊக்குவிப்பாளருக்கு ரூ.200 வழங்கப்படும். இதனை தகுதியுள்ள தந்தையர்கள் ஏற்பதன் மூலம் சிறுகுடும்ப நெறியை பின்பற்றலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் விஜயா, துணை இயக்குநர் (தொழுநோய்) யமுனா, துணை இயக்குநர் (காசநோய்) சுந்தரலிங்கம், புள்ளிவிபர உதவியாளர் குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.