பேஸ்புக் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி வழக்கில் திருவள்ளூர் இளைஞர் கைது
பேஸ்புக் விளம்பரம் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த ராமர் (வயது 48) என்பவரின் முகநூல் (பேஸ்புக்) கணக்கு பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த இணையதள முகவரியில் ரூபாய் 12,10,740 முதலீடு செய்துள்ளார்.
இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். ராமர் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், அந்த புகார் தொடர்பாக தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சுதாகர் மற்றும் வசந்தகுமார் உட்பட போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, ராமரை மோசடி செய்ததாக கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பு கருணாகரன் (32) என்பவரை கடந்த 03.02.2023 அன்றும் மற்றொரு எதிரியான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஓபேத் பால் (38) என்பவரை கடந்த 16.02.2023 அன்றும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொருவரான திருவள்ளுர் மாவட்டம் புதூர் மின்நகரை சேர்ந்த சஞ்சீவ் குமார் (42) என்பவரை நேற்று (23.02.2023) அவரது வீட்டருகே வைத்து போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சஞ்சீவ்குமாரிடம் இருந்து ஒரு ஐ போனையும் பறிமுதல் செய்த போலீஸார், அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கைதான சஞ்சீவ் குமாரின் தனியார் வங்கி கணக்கில் 01.04.2020 முதல் 20.02.2023 வரை ரூபாய் 2,13,44,882.95 பணப்பரிமாற்றமும் மற்றொரு வங்கி கணக்கில் 18.04.2022 முதல் 20.02.2023 வரை ரூபாய் 3,10,72,841 பணப்பரிமாற்றமும் என மொத்தம் 5,24,17,643 பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், சுமார் 200 வங்கி கணக்குகளை ஒபேத் பாலுக்கு அனுப்பி பணப்பரிமாற்றம் செய்யச்சொல்லி பல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க உடந்தையாக சஞ்சீவ் குமார் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த வழக்கில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.