கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் பாரம்பரிய உணவு வகைகள் கண்காட்சி
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மைக் கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி - விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்தவேளாண்மைக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிறகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டினை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதேபோல் பட்ஜெட்டில் பனைமரங்கள் பாதுகாப்பிற்கான அறிவிப்பினையும் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திரதின உரையில்,கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் பெயரை கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரானார் பெயரை சூட்டி இந்தப் பகுதி மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார்.
மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனை, வாழை ஆராய்ச்சிக்கு என தனியாக ஆராய்ச்சி மையத்தினை அமைத்து தந்துள்ளார். கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்பதுதான் நமது அடுத்தக் கோரிக்கை ஆகும். இந்தக் கண்காட்சியில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் வகைகள் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய நெல் வகைகளில் ஆராய்ச்சி செய்து அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யவேண்டும். பாரம்பரிய நெல் வகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நீரிழிவு வந்தவுடன் அரிசி உணவை நிறுத்திவிட்டு, சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று கூறும் நிலை இருந்தது. ஆனால் இப்போது மருத்துவர்கள் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள்தான் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது என்று கூறுகிறார்கள். சோளம், வரகு, கம்பு, ராகி உள்ளிட்டஉணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
தொடர்ந்து, மறவன்மடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தார். பின்னர், அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.