கல்வி சேவையில் சிறப்பான பணி: தேசிய விருது பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி

கல்விச் சேவையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது இன்று வழங்கப்பட்டது.

Update: 2023-09-27 14:18 GMT

மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விருதை பெற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநகராட்சிகளை சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து ஏராளமான மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வாகன நிறுத்தங்கள், அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், பல பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் பணிகளை மேற்கொள்ள மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்து இருந்தார். அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பணிகளை பார்வையிட்ட சீர்மிகு நகரம் திட்ட ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியை வழங்கும் பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் மூன்றாவது பரிசுக்கு தேர்வாகியது. இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி முதல் முறையாக தேசிய விருது பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்க எடுக்கப்படும் என்றும் விருது பெற்ற மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News