தீபாவளி பண்டிகை: எட்டயபுரம், ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் வரத்து குறைவு
தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற எட்டையபுரம் மற்றும் ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தையில் விவசாயிகளிடம் இருந்து ஆடு வரத்து குறைவு காரணமாக விற்பனை மந்தமாக காணப்பட்டது.;
தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தையாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தை இயங்கி வருகிறது. இந்த ஆட்டுச் சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் செயல்படுவது வழக்கம். மதுரை, மானாமதுரை, திருமங்கலம், அருப்புக்கோட்டை. ராமநாதபுரம், சாயல்குடி, எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் வருவார்கள்.
இந்தச் சந்தையில் ஆண்டுதோறும் ரம்ஜான், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த காலங்கள், கோயில் திருவிழாக்களையொட்டி ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும் பண்டிகை காலங்களில் சுமார் ரூ. 8 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். மற்ற சாதாரண நாட்களில் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், எட்டயபுரம் ஆட்டுச் சந்தை மிக அதிகளவில் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. வியாபாரிகளும் அதிக அளவு வரவில்லை. ஆனாலும் ஆடுகளின் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது.
ஆடுகளின் வயது மற்றும் தரத்தை பொறுத்து கிலோ சுமார் ரூ. 600 முதல் ரூ.1000 வரை என்ற அடிப்படையில் விற்பனையானது. இளம் குட்டி ரூ.1500 வரை விற்பனையானது. சுமார் 25 கிலோ கொண்ட கிடா ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. தீபாவளி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி ஏற்கனவே மேலப்பாளையம், அருப்புக்கோட்டை, திருமங்கலம் உள்ளிட்ட ஆட்டுச் சந்தைகள் கூடிவிட்டன. அதனால் இன்று எட்டயபுரம் ஆட்டு சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருகை குறைவாக இருந்தது.
இன்றைய தினம் சுமார் 1500 ஆடுகள் வரையே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் அளவிலேயே ரூ.2 கோடி வரை விற்பனை நடந்தது. தீபாவளிக்கு ஒருவராத்துக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் ஆட்டு சந்தைகள் கூடிவிட்டதால் எட்டயபுரத்துக்கு ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இருந்ததால் விவசாயிகளால் ஆடுகளை கொண்டுவர முடியாத சூழலும் உருவாகிறது இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தை:
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தையும் தென் மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டு சந்தைகளில் ஒன்றாகும்.
இந்த ஆட்டு சந்தையில் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழகம், வெளி மாநில ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தை இன்று நடைபெற்றது.
இதில் நாடு, செம்மறி, ஆந்திரா உட்பட பல்வேறு வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வழக்கமாக பண்டிகை நாட்களில் இந்த ஆட்டு சந்தையில் கறிக்கடைகார்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்குவார்கள். ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஆனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கறிக்கடைகார்கள் அதிக விலைக்கு ஆடுகள் வாங்குவதை தயக்கம் காட்டுவதால் ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகும் இந்த ஆட்டுச் சந்தையில் வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.