அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஊழல் வழக்கில் அமலாக்க துறை வக்கீல் வாதம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை வக்கீல் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை 90 சதவீதம் முடிவுற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், தங்களை ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை சார்பில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் யாரும் ஆஜராகாத நிலையில் அனிதா தரப்பு வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி இருந்தார். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி இருந்தார்.
வழக்கு விசாரணை துவங்கிய நிலையில், அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் வாதத்தை தொடங்கினார். அப்போது, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றப்பத்திரிகையும் பலமுறை மாற்றி மாற்றி தாக்கல் செய்து உள்ளனர் என்றும் வாதிட்டார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சுமார் ரூ. 2 கோடி அளவு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 60 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்து உள்ளதாக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது. எனவே அந்த ஆதாரங்களை வைத்து தங்களை இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
மேலும், இதற்கு ஆதாரமாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்து கூறினார். இதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் மனோகர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.