தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!
தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் துறைமுகம் செல்லும் வழியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம் ,மின்சார வாரிய பொறியாளர் சங்கம், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் ,தேசிய மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், அனல் மின்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு மற்றும் மின்வாரியத்தை கண்டித்தும், டான்ஜிட்கோ அமைப்பை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும், இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிளாஸ் 1 மற்றும் 2 ஊழியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள 60,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆறு சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மின்சாரவாரிய ஆணை 2-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனல் மின் நிலையத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அனல் மின்நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.