இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம்.. மின் நுகர்வோர் அவதி..

மின்வாரிய இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்ற அறிவிப்பால் மின் நுகர்வோர் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2022-11-22 15:12 GMT

மின்வாரிய இணையதள முகப்பு.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற அறிவிப்பு வருகிறது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக, எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் சங்கர் கூறியதாவது:

மின் கட்டணம் செலுத்த கடைசி நாளன்று மின் நுகர்வோரின் ஆதார் எண் இணைக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு அறிவிக்கப்படாத நிலையில், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்று நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. மின் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் வாரிய அலுவலகத்தில் போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும் போது இத்தகைய நிலை ஏற்படவில்லை. ஆனால், தனியாக இணையதளம் மூலமாக மின் கட்டணம் செலுத்தும்போது, ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

அதற்கேற்ப இணையதள பக்கம் வடிவமைக்கப்படவில்லை. அதனால் இன்டர்நெட் மையத்தில் ஆதார் எண்ணை இணைக்காமல் மின் வாரிய இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்த முற்படும்போது, தானாகவே ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்க் முகப்பு பக்கத்தில் வந்து விடுகிறது.

இதில், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடிகிறது. அதேவேளையில், செல்போன் மூலம் யூபிஐ மூலம் மின் கட்டணம் செலுத்த முடிகிறது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க முயன்றாலும் இத்தனை கே.பி-க்குள் ஆதாரின் புகைப்படம் இருக்க வேண்டும் என தகவல் வருவதால் அதிலும் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.

அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை கருத்திற் கொண்டு போதிய கால அவகாசத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல, மின்வாரியமும் உரிய கால அவகாசத்தை மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் சங்கர் தெரிவித்தார்.

Tags:    

Similar News